Tuesday, November 20, 2018

வேர்க்கடலை உருண்டை

வேர்க்கடலை உருண்டை

தேவையானவை :

உப்பில்லாமல் வறுத்த , தோலெடுத்த வேர்க்கடலை  2  கப் 
வெல்லம் 1 - 1 /2  கப் 
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன் 
சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கொஞ்சம் 

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க ) 

செய்முறை :

அடி கனமான வாணலி இல் அல்லது உருளி இல் வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். 
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் தேங்காய் துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான வேர்க்கடலை உருண்டைகள்  தயார்.
இதை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
உருண்டை வேண்டாம் என்று நினைத்தால், நெய் தடவிய தட்டில் கொட்டி  கொஞ்சம் ஆறினதும் வில்லைகள் போடுங்கள் புன்னகை 

No comments:

Blog Archive