மிகவும் அருமையான தித்திப்பு இது . எங்க அப்பாவிற்கு மிகவும் பிடித்தமானது...இதன் வித்தியாசமான சுவையால் நிறைய பேருக்கும் இது பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்
தேவையானவை :
அரிசி மாவு 2 கப்
பயத்தம் பருப்பு மாவு 1 கப்
வெல்லம் 2 - 2 1 /2 கப்
ஒரு சிட்டிகை உப்பு
பொறிக்க எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்
ஏலக்காய் பொடி கால் ஸ்பூன்
இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )
செய்முறை :
மாவுகள் இரண்டையும் போட்டு உப்பு மற்றும் நெய் விட்டு, நன்கு கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மிருதுவான மாவாக கலக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணெய்விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக்கொண்டு அதில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
கொஞ்சம் வெந்ததும் திருப்பிவிடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
இப்படியே எல்லா மாவையும் பிழிந்து கொள்ளவும்.
மற்றும் ஒரு அடுப்பில், வெல்லத்தை துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
இதற்கு நடுவில் பிழிந்து வைத்துள்ள தேன்குழல்கள் கொஞ்சம் ஆறினதும் அவற்றை சிறிய துண்டுகளாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள தேன்குழல் அதாவது மனோகர துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான மனோகரங்கள் தயார்.
ஒருமுறை செய்து பாருங்கள் இது உங்களுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறிவிடும்.
குறிப்பு: இரண்டு அரிசி ஒரு பயத்தம் பருப்பு என்ற அளவில் அளந்து கொண்டு, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான பொது மனோகரம் செய்து கொள்ளலாம். பொதுவாக வெறும் பயத்தம் பருப்பில் செய்த பண்டங்களை பண்டிகைகளுக்கு , நல்லதுக்கு செய்வது வழக்கம் இல்லாத காரணத்தால், இதை செய்யும்போது ஜஸ்ட் இரண்டு கடலை பருப்பு போட்டு அரைக்கவேண்டும். கடை இல் வாங்கிய மாவில் செய்வதானால் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவேண்டும்
No comments:
Post a Comment